இலங்கையில் ஜப்பான் தூதர்

24.01.2009

அப்பாவி பொது மக்களை விடுதலைப்புலிகள் கேடயமாக பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது என்று ஜப்பான் தூதர் யாசுஷி அகாஷி தெரிவித்துள்ளார். . இலங்கையில் அமைதி ஏற்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மறுகட்டுமானப் பணிகளுக்கான ஜப்பான் அரசாங்கத்தின் தூதரான யாசுஷி அகாஷி இலங்கைக்கு 5 நாள் பயணமாக சென்றுள்ளார்.

அவர், நேற்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே மற்றும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித போகலகாமாவை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது போர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களின் மனித அவல நிலை பிரச்சனை குறித்து விரிவாக பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரால் இடம் பெயர்ந்தவர்களின் அவல நிலை குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக யாசுஷி அகாஷி திரிகோணமலை மற்றும் வவுனியா பகுதிகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு பல்வேறு தரப்பினரைஅவர் சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது.

நிரந்தர அமைதி ஏற்படுத்துவதற் காகவும், ஜனநாயகத்தை மீண்டும் நிலை நிறுத்துவதற்காகவும், விடுதலைப்புலிகளின் பயங்கர வாதத்தை அறவே ஒழித்துக்கட்டும் நோக்கத்துடன் மனிதநேய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக ஜப்பான் தூதரிடம் போகலகாமா தெரிவித்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

போரின் போது பொது மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு மண்டல பகுதிக்குள் பொது மக்கள் செல்லுமாறு அரசு அறிவுறுத்தியிருப் பதாகவும் அதனை ஏற்று பெருமளவு மக்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை விட்டு வெளியேற காத்திருப்பதாகவும் யாசுஷி அகாஷியிடம் போகலகாமா கூறியதாக அரசு குறிப்பிட்டுள்ளது.

பொது மக்களை பாதுகாப்பதற்காக அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஜப்பான் தூதர் திருப்தி வெளியிட்டதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


முகப்பு


ஈழம் 2008 அகவி